செய்திகள்
பலியான மாணவன்

குன்றத்தூர் அருகே ஏரியில் மூழ்கிய மாணவர் உடல் 2 நாட்களுக்கு பின் மீட்பு

Published On 2019-12-04 12:47 IST   |   Update On 2019-12-04 12:47:00 IST
குன்றத்தூர் அருகே ஏரியில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய மாணவர் உடல் 2 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

சோமங்கலம் அடுத்த பழந்தண்டலம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் கார்த்திக் (17).

இவர் நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கார்த்திக் தனது நண்பர்களுடன் சோமங்கலம் அருகே உள்ள பெரிய ஏரிக்கு குளிக்க சென்றார். அப்போது ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மீன் பிடி படகில் அனைவரும் ஏறி ஏரிக்குள் சென்றனர்.

ஏரியின் நடுவே படகு ஒன்று நின்றது. படகை திருப்புவதற்கு படகில் இருந்த கார்த்திக், சஞ்சய் ஆகிய இருவரும் ஏரியில் இறங்கி உள்ளனர்.

அப்போது திடீரென நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார்கள். சஞ்சய் கொஞ்சம் தடுமாறி ஏரியில் சற்று மேடான பகுதியில் நின்றதால் உயிர் தப்பினார். கார்த்திக் ஆழமான பகுதியில் சிக்கியதால் நீரில் மூழ்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த சோமங்கலம் போலீசார், தீயணைப்பு வீரர்கள், தமிழ்நாடு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு துறையினர் 2 நாட்களாக கார்த்திக்கின் உடலை தேடிவந்தனர். இன்று காலை கார்த்திக் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News