செய்திகள்
மாமல்லபுரத்தில் குவிந்த குப்பைகள்

சீன அதிபர் வருகைக்கு பின் மாமல்லபுரம், கோவளத்தில் மீண்டும் குவிந்த குப்பைகள்

Published On 2019-10-15 07:03 GMT   |   Update On 2019-10-15 07:03 GMT
சீன அதிபர் வருகைக்கு பின் மாமல்லபுரம் மற்றும் கோவளத்தில் மீண்டும் குப்பைகள் அதிகரித்துள்ளதையடுத்து சுத்தமாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம்:

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் 2 நாட்கள் சந்தித்து பேசினர். தலைவர்கள் வருகையொட்டி மாமல்லபுரம் நகரமே புதுப்பொலிவு பெற்றது. சாலையோர கடைகள் மற்றும் குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டு பளிச்சென காட்சி அளித்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

புதுப்பொலிவுடன் மின்விளங்கு அலங்காரத்தில் சிற்பங்களை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் தொடர்ந்து மாமல்லபுரத்தில் குவிந்து வருகிறார்கள்.

இதற்கிடையே தலைவர்கள் வருகையொட்டி புதுப்பொலிவுடன் காணப்பட்ட மாமல்லபுரம் நகரம் தற்போது மெல்ல மெல்ல பொலிவை இழந்து வருகிறது. சாலையோர கடைகள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்படுகின்றன.

மேலும் குப்பைகளும் அகற்றப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. கோவளத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் பிரதமர் மோடி தங்கி இருந்த போது கடற்கரையோரத்தில் கிடந்த குப்பைகளை அகற்றினர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் கோவளம் கடற்கரை பகுதியிலும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இது சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.

ஏற்கனவே செய்திருந்த நடவடிக்கை போலவே மாமல்லபுரம் நகரத்தை சுத்தமாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி உள்ளனர்.

மாமல்லபுரம் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடப்பது குறித்து பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து அதனை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள்.

தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கடலோரத்தில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாமல்லபுரம் புராதன சின்னங்கள் அருகே தள்ளுவண்டி, பெட்டிக்கடை, ஐஸ்கிரீம், இளநீர் சைக்கிள் போன்றவை அப்பகுதியில் நிரந்தரமாக ஆக்ரமித்து வைக்க கூடாது. அப்படி வைத்தால் அவைகளை மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்யும் எனவும் மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags:    

Similar News