செய்திகள்
மர்ம நபர்களால் வெட்டப்பட்ட மரத்துக்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

மர்ம நபர்களால் வெட்டப்பட்ட மரத்துக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பொதுமக்கள்

Published On 2019-10-14 06:52 GMT   |   Update On 2019-10-14 06:52 GMT
குடியாத்தத்தில் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட மரத்துக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய பொதுமக்கள், வெட்டிய மரத்திற்கு அருகே 5 மரக்கன்றுகளை நட்டனர்.
குடியாத்தம்:

குடியாத்தம்-சித்தூர் சாலையின் இருபுறமும் பெரிய அளவிலான மரங்கள் உள்ளன. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மரத்தடியில் ஓய்வு எடுத்து செல்வார்கள். இந்த சாலையில் உள்ள பாக்கம் ஊராட்சியில் செல்வபெருமாள் நகருக்கும், மோர்தனா கால்வாய்க்கும் இடையே சாலையோரம் சுமார் 20 ஆண்டுகள் பழமையான பெரிய அளவிலான தூங்குமூஞ்சி மரம் இருந்தது.

இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் இந்த மரத்தை வெட்டி சாய்த்துள்ளனர். நேற்று காலையில் இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து பாக்கம் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வெட்டிய மரத்திற்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து பூஜை செய்தனர்.

தொடர்ந்து வெட்டிய மரத்திற்கு அருகே 5 மரக்கன்றுகளை நட்டனர். இதில் அ.தி.மு.க. பிரமுகர் பாக்கம் பாஸ்கர், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சுரேஷ்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ஹரிதாஸ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மரத்தை வெட்டிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரத்தை வெட்டியதற்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News