செய்திகள்
மழை

சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு - ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2019-09-19 04:55 GMT   |   Update On 2019-09-19 10:26 GMT
சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சேலம்:

வெப்ப சலனம் மற்றும் வழி மண்டல மேலடுக்கு சுழற்சியால் சேலம் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நேற்று நள்ளிரவில் தொடங்கிய மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையாக கொட்டி தீர்த்தது. இதில் குறிப்பாக எடப்பாடி, ஏற்காடு பகுதிகளில் கன மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம் என மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சாலையில் ஓடியதால் மக்கள் அவதிப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சேலம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஏற்காடு மலைப்பாதையில் பெய்யும் மழையால் அடிவாரத்தில் உள்ள புது ஏரிக்கு தண்ணீர் வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யாததால் புது ஏரிக்கு தண்ணீர் வராத நிலையில் தற்போது தண்ணீர் வருவதால் விரைவில் ஏரி நிரம்பும் என கூறப்படுகிறது.

புது ஏரி நிரம்பினால் அந்த தண்ணீர் மூக்கனேரிக்கு வரும் என்பதால் அந்த ஏரியும் நிரம்பும். பின்னர் மூக்கனேரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் திருமணிமுத்தாற்றுக்கு வரும் என்பதால் கரையில் உள்ள ஏரி, குளங்களும் நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

எடப்பாடி- 51, ஏற்காடு - 24, கரியகோவில் -15, சேலம் -10.7, ஆனை மடுவு- 8, காடை யாம்பட்டி-5.3, ஆத்தூர்- 1.6, ஓமலூர்- 1.2, பெத்தநாயக்கன் பாளையம்-1

என மாவட்டம் முழுவதும் மொத்தம் 117.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News