செய்திகள்
அணைக்கரை கீழணையில் இருந்து பாசனத்திற்காக அமைச்சர் எம்.சி.சம்பத் தண்ணீரை திறந்து வைத்தார்

அணைக்கரை கீழணையில் இன்று தண்ணீர் திறப்பு - அமைச்சர் சம்பத் திறந்துவைத்தார்

Published On 2019-09-11 11:27 IST   |   Update On 2019-09-11 11:27:00 IST
அணைக்கரை கீழணையில் இருந்து பாசனத்திற்காக ஆறுகள், வாய்க்கால்களில் இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு மதகின் ‌ஷட்டரை திறந்து வைத்தார்.
ஜெயங்கொண்டம்:

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் திருச்சி முக்கொம்பு கதவணையை அடைந்து, அங்கிருந்து தஞ்சை கல்லணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முக்கொம்பு மற்றும் கல்லணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.

இந்த தண்ணீர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணைக்கரை கீழணையை சென்றடைந்துள்ளது. அணைக்கரை கீழணையின் மதகுகள் ஏற்கனவே பழுதடைந்துள்ளதால் அங்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாசனத்திற்காக அணைக்கரை அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் இன்று காலை அணைக்கரை கீழணையில் இருந்து பாசனத்திற்காக ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு மதகின் ‌ஷட்டரை திறந்து வைத்தார்.

கொள்ளிடம் ஆற்றில் இருந்து அணைக்கரை அணைக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதில் வடவாறு வாய்க்காலில் 1,800 கனஅடி தண்ணீரும், வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கனஅடியும், தெற்கு ராஜன் வாய்க்காலில் 400 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வடவார் வாய்க்கால் தண்ணீர் மூலம் கடலூர் மாவட்டத்தில் 47,997 ஏக்கர் நிலமும், தெற்கு ராஜன், குமுக்கி மன்னியார், மேல ராமன், வினாயகன் வாய்க்கால்கள் தண்ணீர் மூலம் நாகை, தஞ்சை மாவட்டங்களில் 39,050 ஏக்கர் நிலமும் என மொத்தம் 87,047 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

அவ்வப்போது பாசன தேவைக்கேற்ப தண்ணீர் அளவு மாற்றியமைக்கப்பட்டு வாய்க்கால்களில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்து பயனடைய வேண்டுமென பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Similar News