செய்திகள்
இன்ஸ்பெக்டரை கண்டித்த கலெக்டர்.

நான் கோபப்பட்டதை பெரிதுபடுத்த வேண்டாம்- கலெக்டர் பொன்னையா பேட்டி

Published On 2019-08-12 12:47 IST   |   Update On 2019-08-12 12:47:00 IST
அத்திவரதரை தரிசிக்க உரிய பாஸ் இல்லாமல் அனுமதித்தது தொடர்பாக இன்ஸ்பெக்டரிடம் கோபப்பட்டதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்:

அத்திவரதர் தரிசன விழாவில் வி.ஐ.பி.க்கள் வரிசையில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் முறையான ‘பாஸ்’ இல்லாமல் சிலரை உள்ளே செல்ல அனுமதித்து இருந்தார். அந்த நேரத்தில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பொன்னையா இதனை கண்டு பிடித்தார்.

இதனால் ஆவேசமான கலெக்டர், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை கண்டித்து கடுமையாக பேசினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டர் பற்றி விமர்சனமும் எழுந்தது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவலர்கள் மிகச் சிறப்பாக பணிபுரிகின்றனர். நாங்கள் ஒரே குடும்பமாக செயல்படுகிறோம். பணிகள் சரியாக நடக்க வேண்டும் என்பதால் சில வி‌ஷயங்களில் கண்டிக்கக்கக் கூடிய சூழல் உள்ளது.

இது தொடர்பாக மீம்ஸ்களை பரப்ப வேண்டாம். முறையாக எல்லாம் நடைபெற வேண்டும் என்பதற்காக உணர்வுப்பூர்வமாக பேசப்பட்ட வார்த்தைகள். இதனைப் பெரிதுப்படுத்த வேண்டாம். அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பேச்சு தனிப்பட்ட நபருக்கு எதிரானது கிடையாது. மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து செயல்படுகிறது. போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர். இதில் சந்தேகம் இல்லை.

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களை தங்க வைத்து அனுப்புவதற்காக கிழம்பி, பிஏ.வி. பள்ளி அருகேயும், பச்சையப்பன் பள்ளி மைதானத்தில் இளைப்பாறும் கூடங்கள் அமைத்துள்ளோம். 25 மினி பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உடன் இருந்தார். அவர் கூறும்போது, ‘வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் காவலர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 500 உயர்த்தப்படும். காவல்துறைக்கு உதவிகளை மாவட்ட கலெக்டர் செய்து வருகிறார்கள். மற்ற துறைகளும் காவல் துறையினருடன் இணைந்து சிறப்பாக செயல்படுகின்றனர்’ என்றார்.

Similar News