செய்திகள்
மரணம்

கோவில் தேரோட்டத்தில் சக்கரத்தில் சிக்கி பக்தர் பலி

Published On 2019-08-05 06:22 GMT   |   Update On 2019-08-05 06:22 GMT
வேதாரண்யம் அருகே கோவில் விழா தேரோட்டத்தின் போது தேர் சக்கரம் ஏறி பக்தர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேதாரண்யம்:

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கடந்த 2-ந் தேதி நடந்த தேரோட்டத்தில் தேரில் சிக்கி கோவில் குருக்கள் பலியானார்.

இந்த சோகம் மறைவதற்குள் வேதாரண்யம் அருகே நடந்த மாரியம்மன் கோவில் ஆடி தேரோட்டத்தில் பக்தர் பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல்சரகம் ஆயக்காரன் புலம் 1-ம்சேத்தி பகுதியில் திங்கள் சந்தையடியில் மழை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் மிகப்பழமையானது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

இக்கோவில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆடிப் பெரு விழா விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கியத் திருவிழாவான தேரோட்டம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோட்டம் அப்பகுதியில் உள்ள குறுகலான வீதிகள் வழியாக மணல் நிறைந்த சாலையில் நடந்தது.

நள்ளிரவு 1.30 மணியளவில் தேர் அப்பகுதி வழியே சென்றபோது தேர் வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கொத்தனார் பஞ்சநாதன்(வயது60), விவசாயி குமரேசன்(64) ஆகிய இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது தேரின் சக்கரம் பஞ்சநாதன் தலையில் ஏறி இறங்கியது. முருகேசன் கை, கால்களில் சக்கரம் ஏறியதால் அவரும் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து பஞ்சநாதனை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதில் படுகாயமடைந்த குமரேசனை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வாய்மேடு இன்ஸ்பெக்டர் சுகன்யா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேர் சக்கரத்தில் சிக்கி இறந்த பஞ்சநாதனுக்கு பூங்கொடி என்ற மனைவியும், பாஸ்கரன் என்ற மகனும், தீபா என்ற மகளும் உள்ளனர்.

கோவில் விழா தேரோட்டத்தின் போது தேர் சக்கரம் ஏறி பக்தர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News