செய்திகள்
கொலையுண்ட டிராக்டர் டிரைவர் ஆத்மநாதன் சாலையில் பிணமாக கிடந்த காட்சி.

அறந்தாங்கி அருகே டிராக்டர் டிரைவர் அடித்துக்கொலை

Published On 2019-07-25 10:14 IST   |   Update On 2019-07-25 10:14:00 IST
அறந்தாங்கி அருகே டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் அருகே உள்ள பழந்தாமரை கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் ஆத்மநாதன் (வயது 38). இவருக்கு திருமணமாகி ரேவதி என்ற மனைவியும், சுரேந்திரன் என்ற மகனும் உள்ளனர்.

டிராக்டர் டிரைவரான இவர் விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். குடிப்பழக்கம் கொண்ட ஆத்மநாதன் தினமும், குறிஞ்சிக்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சாலையோரம் அமர்ந்து இரவு நேரங்களில் மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் ஆத்மநாதன் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இன்று காலை மாரியம்மன் கோவில் பகுதியில் சென்றவர்கள் அங்கு ஒருவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்த போது அது ஆத்மநாதன் என்பது தெரிந்தது.

உடனடியாக இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கும், ஆவுடையார்கோவில் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஆத்ம நாதனின் உடலை மீட்டனர்.

அப்போது அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. மேலும் இருசக்கர வாகனத்தின் டயர் அவரது உடல் மீது ஏறி, இறங்கியதற்கான தடயங்களும் காணப்பட்டன. எனவே யாரோ மர்ம நபர்கள் அவரை அடித்துக்கொலை செய்திருக்கலாம் எனவும், மது குடிக்கும் தகராறில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேதிக்கிறார்கள்.

இதுதொடர்பாக ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News