செய்திகள்
போக்குவரத்து மாற்றம்

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிக்காக ஜோலார்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்

Published On 2019-07-06 05:17 GMT   |   Update On 2019-07-06 05:17 GMT
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிக்காக ஜோலார்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை:

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து டேங்கர் ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என அறிவித்தார். அதற்காக முதற்கட்டமாக ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்வதற்கான ஆய்வு பணிகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மெட்ரோ அதிகாரிகள் மேற்கொண்டனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தரைமட்ட குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பார்ச்சம்பேட்டை ரெயில்வே கேட் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லும் வகையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தியில் இருந்து பெரிய குழாய்கள் வரவழைக்கப்பட்டன. இதனை அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது.

இன்று காலை சென்னை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை வாரிய இயக்குனர் மகேஸ்வரன் ஜோலார்பேட்டைக்கு வருகிறார். இவருடன் உயர் அதிகாரிகள், மெட்ரோ அதிகாரிகள் பார்வையிட உள்ளனர்.


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் குழாய் இணைப்பு இணைக்க இன்று மாலை முதல் நாளை பகல் முழுவதும் திருப்பத்தூர்- வாணியம்பாடி செல்லும் சாலையில் பணிகள் நடக்கிறது. இதற்காக மேட்டுசக்கரகுப்பம் அருகே சாலையை தோண்டி அடியில் குழாய்கள் பொருத்தும் பணி நடக்கிறது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனால் ஜோலார்பேட்டை ஜங்‌ஷன் பஸ் நிறுத்தத்தில் இருந்து புது ஓட்டல் தெரு, பார்ச்சம்பேட்டை, ஆஞ்சநேயர் கோவில் வழியாக வாணியம்பாடி நோக்கி செல்ல வேண்டும். அதேபோல் வாணியம்பாடியில் இருந்து வாகனங்கள் ஆஞ்சநேயர் கோவில் வழியாக, புதுஓட்டல், ஜங்‌ஷன் வழியாக திருப்பத்தூர் நோக்கி செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பணிகள் நிறைவடைந்ததும் வருகிற 10-ந்தேதி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News