செய்திகள்
ஜோலார்பேட்டையில் ரெயில் தண்டவாளங்களுக்கு அடியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்த காட்சி

ரெயிலில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்தது

Published On 2019-07-05 15:24 IST   |   Update On 2019-07-05 15:24:00 IST
ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்தது.
ஜோலார்பேட்டை:

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தினமும் ரெயிலில் 4 தடவை 50 வேகன்களில் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ரூ.60 கோடி ஒதுக்கி பணிகள் நடந்து வருகிறது.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகில் உள்ள மேட்டு சக்கரகுப்பம் காவிரி கூட்டுக்குடிநீர் தொட்டியில் இருந்து 3½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்சம்பேட்டை ரெயில்வே கேட் பகுதிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ரெயில் வேகன்களில் நிரப்பப்படுகிறது.

இதற்கான பணிகள் ஜோலார்பேட்டையில் வேகமாக நடந்து வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ குடிநீர் வாரியம், மாநில நெடுஞ்சாலை துறை, மின்வாரியம், தென்னக ரெயில்வே துறை அதிகாரிகள் ஆகிய 4 துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து வேலையில் திவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட தொட்டியில் பம்பிங் மெஷின் பொருத்துவதற்கான அளவீடு நடைபெற்று வருகிறது. அதேபோல், ஏற்கனவே உள்ள பழைய பம்பிங் மெஷினில் இருந்து தண்ணீர் எடுத்துச்செல்ல தனி மீட்டர் போர்டு அமைக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.

பார்சம்பேட்டை அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட 'ஹரிசாண்டல்' எந்திரம் மூலம் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கால்வாய் வழியாக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது. இந்த பணிகளை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதேபோல் தண்டவாள பகுதியில் குடிநீர் குழாய்களை எடுத்துச்செல்ல தனித்தனியாக இரும்பு சட்டங்கள் (ஆங்கிள்கள்) பொருத்தப்பட உள்ளன. இப்பணிகள், அனைத்தும் 8-ந் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னைக்கு ரெயில் மூலம் குடிநீர் எடுத்துச்செல்லும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நவீன உபகரணங்களை கொண்டு ராட்சத குழாய்கள் புதைக்கும் பணி, பம்பிங் மெஷின் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த 5 நாட்களில் 50 சதவீதம் பணிகள் முடிவு பெற்றுள்ளன என்றார்.

இந்த நிலையில் ஜோலார்பேட்டையில் நடந்து வரும் பணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஷ்வரன் நேற்று ஆய்வு செய்ய வருவதாக இருந்தது. அவர் வரவில்லை இன்று அவர் நேரில் வந்து பணிகளை ஆய்வு செய்கிறார்.


Similar News