செய்திகள்

நீட் தேர்வில் இருந்து சித்தா படிப்புக்கு விலக்கு பெறுவது சவாலானது- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Published On 2019-06-23 16:20 GMT   |   Update On 2019-06-23 16:20 GMT
சித்தா படிப்புக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விலக்கு பெறுவது என்பது சவாலாக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை :

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு சித்தா படிப்புக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த பதிலும் பெறப்படவில்லை. சித்தா படிப்புக்கு விலக்கு பெறுவது என்பது சவாலாக உள்ளது.

அம்மா காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு இதுவரை ரூ.5,900 கோடி செலவு செய்துள்ளது. அதில் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.2,200 கோடி திரும்ப வந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான கட்டமைப்பு வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பதால் இங்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கேரள மாநில எல்லையோர மாவட்டங்களில் தமிழக அரசு மிக கவனமாக கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அதிக அளவு பணியாற்றினாலும் கூட அம்மாநிலத்தில் பரவியுள்ள மூளைக்காய்ச்சல் நோய் இங்கு பரவவில்லை. இனி மேலும் பரவ வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News