செய்திகள்

தண்ணீர் தட்டுப்பாடு - காஞ்சீபுரத்தில் தனியார் பள்ளிக்கு அரைநாள் விடுமுறை

Published On 2019-06-19 07:39 GMT   |   Update On 2019-06-19 07:39 GMT
தண்ணீர் பற்றாக்குறையால் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது.
காஞ்சீபுரம்:

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. தினந்தோறும் மக்கள் தண்ணீருக்காக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவ- மாணவிகளின் அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் வழங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

தண்ணீர் பற்றாக்குறையால் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் பள்ளி அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது.

காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள சங்குஷா பேட்டை பி.எஸ்.கே. தெருவில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். தண்ணீர் பிரச்சினையில் இந்த பள்ளி சிக்கி தவித்து வருகிறது. மாணவ- மாணவிகளின் அடிப்படை தேவைக்கு கூட தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்று முதல் (18-ந் தேதி) பிரி.கேஜி வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை 9.30 மணியில் இருந்து மசியம் 12.30 மணி வரை மட்டும் வகுப்புகள் இயங்கும் என்று பள்ளி நிர்வாகத்தினர் அறிவித்து உள்ளனர்.

அவர்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகையை பள்ளி முன்பு நிர்வாகத்தினர் வைத்துள்ளனர்.
Tags:    

Similar News