நடிகை ரன்யா ராவின் தந்தை டி.ஜி.பி. ராமசந்திர ராவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு
- ராமசந்திர ராவ் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் 3 வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
- இந்த வீடியோக்கள் உண்மை இல்லை. அது போலி வீடியோக்கள் ஆகும்.
பெங்களூரு:
கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் ராமசந்திர ராவ் (வயது 59). இவரது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ் ஆவார். இவர் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது விமான நிலையத்துக்கு போலீஸ் வாகனத்தை ராமசந்திர ராவ் அனுப்பி வைத்திருந்தார்.
இதனால் தங்கம் கடத்தி வந்த ரன்யா ராவை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்யாமல் பலமுறை அனுப்பி வைத்திருந்தனர். இதன் காரணமாக தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விவகாரத்தில் ராமசந்திர ராவும் சிக்கி இருந்தார். கடந்த ஆண்டு(2025) ராமசந்திர ராவை கட்டாய விடுப்பில் அரசு அனுப்பி வைத்திருந்தது. மாத கணக்கில் அவருக்கு பொறுப்பு வழங்காமல் அரசு இருந்தது.
அதன்பிறகு தான் குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு டி.ஜி.பி.யாக ராமசந்திர ராவ் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த தங்கம் கடத்தல் வழக்கால் மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக (தலைமை) வாய்ப்பு இருந்தும், அது பறிபோய் விட்டது. இந்த நிலையில், ராமசந்திர ராவ் தனது அலுவலகத்திலேயே சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்ததுடன் உடல்களை தொட்டு லீலையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது ராமசந்திர ராவ் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் 3 வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில், 2 வீடியோக்களில் அவர் சீருடை அணிந்து கொண்டு இருக்கிறார். மற்றொரு வீடியோவில் மட்டும் சாதாரண உடையை அவர் அணிந்திருக்கிறார். இதன்மூலம் பணியில் இருக்கும்போதே, அவர் பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது.
3 வீடியோக்களில் இருக்கும் பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் யார்? என்பது தெரியவில்லை. அந்த 3 வீடியோக்களில் இருக்கும் பெண் ஒருவரா?, அல்லது வெவ்வேறு பெண்களா? என்பதும் தெரியவில்லை. ஆனால் அப்பெண்கள் விருப்பப்பட்டு தான் ராமசந்திர ராவுடன் பழகுவது போன்று வீடியோவில் காட்சிகள் இருக்கிறது.
அந்த வீடியோக்களை ராமசந்திர ராவே எடுத்தாரா?, அல்லது வேறு யாரும் ரகசியமாக எடுத்து வெளியிட்டு உள்ளார்களா? என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் 3 வீடியோக்களின் பின்னணியில் இசை, பாடல் ஒலிப்பது தெரியவந்துள்ளது. இதனால் ரகசியமாக பெண்களுடன் ராமசந்திர ராவ் இருப்பதை யாரோ மர்மநபர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விசாரணை நடத்தினால் மட்டுமே, அந்த வீடியோவில் இருக்கும் பெண்கள் பற்றியும், மற்ற தகவல்கள் பற்றியும் தெரியவரும் என உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆபாச வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து, பெங்களூரு சதாசிவநகரில் உள்ள போலீஸ் மந்திரி பரமேஸ்வர் வீட்டுக்கு டி.ஜி.பி. ராமசந்திர ராவ் நேற்று மதியம் சென்றார். வீடியோக்கள் குறித்து அவர் விளக்கம் அளிக்க சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ராமசந்திர ராவுக்கு மந்திரி பரமேஸ்வர் அனுமதி வழங்கவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார்.
பின்னர் சதாசிவநகரில் வைத்து ராமசந்திர ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
போலீஸ் மந்திரி பரமேஸ்வரை சந்தித்து பேசுவதற்காக வந்தேன். தற்போது அவருக்கு உடல் நிலை பாதிப்பு காரணமாக சந்திக்க முடியவில்லை. நான் பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. நான் பெலகாவி மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோது எடுக்கப்பட்டது. அந்த பழைய வீடியோக்களை யாரோ வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறிது நேரத்தில் முதலில் கூறிய கருத்தை ராமசந்திர ராவ் மறுத்து பல்டி அடித்து மீண்டும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்த வீடியோக்கள் உண்மை இல்லை. அது போலி வீடியோக்கள் ஆகும். அந்த வீடியோக்கள் எப்படி வெளியானது என்று தெரியவில்லை. வீடியோக்கள் வெளியானது பற்றி விசாரணை நடத்தினால் தான் உண்மை தெரியவரும். யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் பற்றி எனது வக்கீலுடன் பேசிவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.
ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவ் மாறிமாறி பேசி இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. பெண்களுடன் ஆபாச செயலில் ராமசந்திர ராவ் ஈடுபட்டு இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ராமசந்திர ராவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் அல்லது பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீசுக்கு சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி புகார் அளித்துள்ளார்.
ராமசந்திர ராவ், கடந்த 1993-ம் ஆண்டை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். அவர் வருகிற மே மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். அதாவது பணி ஓய்வுபெற 4 மாதங்களே இருக்கும் நிலையில் அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆபாச வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவாகவில்லை. என்றாலும், ராமசந்திர ராவை பணியிடை நீக்கம் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.