செய்திகள்

டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து இரும்பு கடை ஊழியர் பலி

Published On 2019-06-16 16:36 IST   |   Update On 2019-06-16 16:36:00 IST
காஞ்சிபுரம் அருகே டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்தது. இதில் இரும்பு கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். சிதறிக்கிடந்த ரூ. 69 லட்சத்தை ஆம்புலன்சு ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

காஞ்சீபுரம்:

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் செட்டியார். இரும்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் பல்வேறு பகுதிகளில் பாக்கி தொகையினை வசூல் செய்ய கடை ஊழியர்கள் முரளி, பாலாஜி, சரவணன் ஆகிய 3 பேரை காரில் வேலூர் அனுப்பி வைத்தார்.

வேலூர் மற்றும் பல்வேறு இடங்களில் ரூ. 69 லட்சத்தை வசூல் செய்துவிட்டு 3 பேரும் காரில் சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

காஞ்சீபுரம் அடுத்த சின்னையன்சத்திரம் பகுதி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்தது.

இடிபாடுகளில் சிக்கிய முரளி சம்பவ இடத்திலேயே பலியானார். பாலாஜியும் சரவணனும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

விபத்து குறித்து அறிந்ததும் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் விரைந்து வந்து காயம் அடைந்த 2 பேரையும் மீட்டனர். அப்போது காருக்குள் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. இதையடுத்து பணத்தையும், காயம் அடைந்தவர்களையும் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மொத்தம் 69 லட்சம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதுகுறித்து ஆம்புலன்சு டிரைவர் சந்தானம் மருத்துவ உதவியாளர் விஜயன் ஆகியோர் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்குக்கு தகவல் அளித்தனர்.

அவரது உத்தரவுபடி போலீசார் விரைந்து வந்து ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் இருந்த ரூ.69 லட்சத்தை பெற்றுக்கொண்டனர்.


விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு, பணத்தையும் நேர்மையாக ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விஜயன் மற்றும் சந்தானத்தினை போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹமதிமானி மற்றும் போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

Similar News