செய்திகள்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சகோதரர்களை போலீசார் அழைத்துச் சென்ற போது எடுத்த படம்.

தந்தையை தாக்கியவரை கொன்ற வழக்கு- சகோதரர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2019-04-11 11:25 GMT   |   Update On 2019-04-11 11:25 GMT
தந்தையை தாக்கியவரை கொன்ற வழக்கில் சகோதரர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
நாகர்கோவில்:

நாகர்கோவிலை அடுத்த தம்மத்து கோணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32).

செல்வகுமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் இடையே கோவில் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது.

இதில் ஏற்பட்ட தகராறில் செல்வராஜை, செல்வகுமார் தாக்கினார். இது பற்றி செல்வராஜ், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே செல்வராஜ், தாக்கப்பட்டதை அறிந்த அவரது மகன்கள் பாபு (26), அய்யப்பன் (24), மணி கண்டன் (23) ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் தம்மத்து கோணம் பகுதியில் நடந்து சென்ற செல்வகுமாரை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் பரிதாபமாக இறந்தார். கடந்த 9-6-2011-ல் இந்த சம்பவம் நடந்தது.

செல்வகுமார் கொலை செய்யப்பட்டது பற்றி ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செல்வராஜின் மகன்கள் மணிகண்டன், அய்யப்பன், பாபு ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான 3 பேரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு நாகர்கோவிலில் உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.

செல்வகுமார் கொலை தொடர்பாக நடந்த வழக்கில் இன்று கூடுதல் மாவட்ட கோர்ட்டு நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு கூறினார்.

இதில் செல்வகுமாரை கொலை செய்தது தொடர்பாக அண்ணன், தம்பிகள் மணிகண்டன், அய்யப்பன், பாபு ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், செல்வகுமாரை தடுத்து நிறுத்தி மிரட்டியது தொடர்பாக 6 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் வழங்கி தீர்ப்பு கூறினார். இத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

கொலை வழக்கின் தீர்ப்பை கேட்க இன்று மணிகண்டன், அய்யப்பன், பாபு ஆகிய 3 பேரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் ஞானசேகர் வாதாடினார்.
Tags:    

Similar News