செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - ஒருநபர் ஆணையத்தின் 10ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம்

Published On 2019-04-08 08:06 GMT   |   Update On 2019-04-08 08:06 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 10-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. #ThoothukudiFiring #ArunaJagadeesan
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்களிடம் 9 கட்டங்களாக விசாரணை நடத்தியது. அப்போது 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து விசாரணை ஆணையத்தின் 10-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. விசாரணை அதிகாரி அருணாஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் அமைந்து உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடந்தது.

இந்த விசாரணைக்காக 47 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று வர சம்மன் அனுப்பப்பட்டிருந்தவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த 10-ம் கட்ட விசாரணை நாளை மறுநாள் (10-ந் தேதி) வரை நடக்கிறது. #ThoothukudiFiring #ArunaJagadeesan

Tags:    

Similar News