செய்திகள்
தி.க.வினர் சாலை மறியல் செய்த காட்சி

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு- போலீஸ் விசாரணை

Published On 2019-04-08 04:18 GMT   |   Update On 2019-04-08 06:18 GMT
அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #PeriyarStatueVandalised
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே 8 அடி உயரம் கொண்ட பெரியார் சிலை உள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு தி.க. தலைவர் கி.வீரமணி இந்த சிலையை திறந்து வைத்தார்.

பெரியாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் தி.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பெரியார் சிலை சாக்குகளால் போர்த்தி மூடி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மறைந்த பழைய தலைவர்களின் சிலைகளை மூடி வைக்க தேவையில்லை என்று அறிவித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கியில் மூடி வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை சாக்குகள் அகற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று அதிகாலை அந்த பகுதிக்கு வந்த யாரோ மர்ம நபர்கள் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். சிலையின் தலைபகுதியை இரண்டு துண்டுகளாக உடைத்து அதே இடத்தில் வீசி இருந்தனர்.



காலையில் அந்த பகுதிக்கு வந்தவர்கள் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறந்தாங்கி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. அடுத்த சில நிமிடங்களில் அங்கு தி.க., தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். மேலும் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. சிவ.மெய்யநாதனும் வந்தார்.

பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தி.க. அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் யோகராஜ் அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், டி.எஸ்.பி. கோகிலா ஆகியோரும் வந்து விசாரித்தனர்.

இதற்கிடையே தி.க. மண்டல தலைவர் ராவணன் தலைமையில் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் கட்சியினர் திடீரென அமர்ந்து மறியல் செய்தனர். உடனடியாக பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர். அவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தார். இந்த மறியலால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சென்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதேபோல் அறந்தாங்கியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதையும் மீறி இன்று அதிகாலை பெரியார் சிலை உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதை இந்து முன்னணியினர் கண்டித்தனர். இதில் பயங்கர மோதல் உருவானது.

அதேபோல் இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தி.க. தலைவர் கி.வீரமணிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் தற்போது அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.  #PeriyarStatueVandalised
Tags:    

Similar News