செய்திகள்

ரங்கசாமி பண அரசியல் செய்கிறார்- நாராயணசாமி கடும் தாக்கு

Published On 2019-04-06 15:13 GMT   |   Update On 2019-04-06 15:13 GMT
பாராளுமன்ற தேர்தலில் ரங்கசாமி பண அரசியல் செய்கிறார் என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து கதிர்காமம் தொகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. அவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வேலை வாய்ப்புகள் இல்லை. விலைவாசி குறைக்கவில்லை. தொழிற்சாலைகள் கொண்டு வருவேன், விவசாயத்தை மேம்படுத்துவேன், அரசு ஊழியர் சம்பளம் உயர்த்துவேன் என மோடி கூறினார். இதில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை.

பா.ஜனதாவின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது.

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பொது, அரசியல் வாழ்க்கையில் அனுபவம் பெற்றவர். எதிர்கட்சி வேட்பாளருக்கு என்ன அனுபவம் உள்ளது? பணம் இருப்பது மட்டும்தான் அனுபவம். பணம் இருந்தால் என்.ஆர்.காங்கிரசில் சீட் கிடைக்கும். பணம் இல்லாவிட்டால் உழைப்பவர்களுக்கும் சீட் கிடைக்காது. பணம் மட்டும்தான் அவரிடம் உள்ளது. ரங்கசாமி பண அரசியல் செய்கிறார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்து மக்களுக்கு சேவை செய்த வைத்திலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர் வெற்றி பெற்றால் மத்திய அரசிடம் கேட்டு புதுவைக்கு பல புதிய திட்டங்களை கொண்டு வருவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின்போது துணைத்தலைவர் பெத்த பெருமாள், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் கே.எஸ்.பி. ரமேஷ், தி.மு.க. தங்கவேலு, இந்தியகம்யூனிஸ்டு நாரா.கலைநாதன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், மதி.மு.க. கபிரியேல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சஞ்சீவி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News