செய்திகள்

காட்பாடியில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்று தி.மு.க.வினருக்கு தெரியும்- விஜயகாந்த் மகன் பேச்சு

Published On 2019-04-06 11:03 GMT   |   Update On 2019-04-06 11:03 GMT
காட்பாடியில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்று தி.மு.க.வினருக்கு தெரியும் என்று வேலூரில் நடந்த பிரசாரத்தில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளார். #vijayaprabhakaran #duraimurugan

வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரித்தார்.

வேலூர் எங்க அம்மாவோட சொந்த மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் ஒரே மருமகன் விஜயகாந்த் தான். தற்போது ‘டாக் ஆப் தி டவுன்’ என வேலூரை தான் அழைக்கிறார்கள். வேலூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக மாறிவிட்டது. ஏனென்றால் ஆட்சியிலே இல்லாவிட்டாலும் பணம் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டுள்ளது. அது யாருடையது என்று உங்களுக்கே தெரியும்.

விஜயகாந்தை தொட்டால் பிரச்சினை என்றேன். தேவையில்லாமல் துரைமுருகன் சீண்டி பார்த்து விட்டார். அதன் விளைவை தெரிந்து கொண்டிருப்பார். ஸ்டாலின் சொல்கிறார் எங்களுக்கு மடியில் கனம் இல்லை அதனால் வழியில் பயம் இல்லை என்று. இதை விஜயகாந்த் சொன்னால் பொருந்தும். உங்கள் உடல் முழுவதும் கனம் இருக்கிறது. அதனால் தான் மாட்டிக் கொண்டீர்கள். ஏ.சி.சண்முகம் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளார். அதை அவர் நிறைவேற்றுவார்.

ஸ்டாலின் எதை எடுத்தாலும் எதிர்க்கிறார். என்னிடம் கூட சிலர் ஸ்டாலினை பற்றி கேட்டார்கள். நான் அவர் ஒரு உளறும் புகார் பெட்டி என்று கூறினேன். எதை எடுத்தாலும் அதை எதிர்த்தால் அவர்கள் முட்டாள் என்று அர்த்தம். எதை எதிர்க்கனுமோ அதை தான் எதிர்க்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாடு வளரும். மத்தியிலும், மாநிலத்திலும் நம் ஆட்சி இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கூட்டணி வைத்தால் தான் நமக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று விஜயகாந்த் கூறினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், தே.மு.தி.க. மத்திய மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். #vijayaprabhakaran #duraimurugan

Tags:    

Similar News