செய்திகள்

வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி வார்டில் புகுந்து தொழிலாளிக்கு வெட்டு - உறவினர்கள் சாலை மறியல்

Published On 2019-03-26 05:12 GMT   |   Update On 2019-03-26 05:12 GMT
வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்ற தொழிலாளியை வாலிபர் வெட்டி சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாணியம்பாடி:

வாணியம்பாடி வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 50), தீர்த்திகிரி (52) கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தனர். அரசு கழிவறைகள் கட்டும் பணியில் ஒன்றாக ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முருகன் கட்டிட வேலைக்கு செல்லாமல் வெள்ளக்குட்டையில் கட்சி கொடிகம்பம் நடும் பணியில் ஈடுபட்டார். இதனைக் கண்ட தீர்த்தகிரி அவரை தட்டிக் கேட்டார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் படுகாயமடைந்த இருவரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆண்கள் வார்டில் தனிதனியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை தீர்த்தகிரியை பார்க்க அவரது மகன் மோகன் (24) வந்தார்.

தந்தையை பார்த்து விட்டு ஆத்திரமடைந்த அவர் ஆண்கள் வார்டில் புகுந்து படுக்கையில் படுத்திருந்த முருகனை கத்தியால் வெட்டினார். அவரது தலை, கை, கால்களில் வெட்டு விழுந்தது. இதனைக் கண்ட நோயாளிகள் கூச்சலிட்டனர். இதனால் மோகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

படுகாயமடைந்த முருகனுக்கு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் புகுந்து தொழிலாளி வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று காலை முருகனின் உறவினர்கள் வெள்ளக்குட்டை பஸ் நிறுத்தத்தில் திரண்டு சாலை மறியல் செய்தனர். தப்பி ஓடிய மோகனை கைது செய்ய கோரி கோ‌ஷமிட்டனர்.

இதனால் ஆலங்காயம்- வாணியம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டனர்.

Tags:    

Similar News