செய்திகள்
தாமரை கோலம் அழிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் தாமரை கோலம் அழிக்கப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை- கலெக்டர் விளக்கம்

Published On 2019-03-16 04:26 GMT   |   Update On 2019-03-16 04:26 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை கோலம் அழிக்கப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். #LSPolls SrivilliputhurTemple
ஸ்ரீவில்லிபுத்தூர்:

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புராணங்களை விளக்கக்கூடிய ஓவியங்கள் மற்றும் பல்வேறு வகையான பூக்கள் நுழைவு வாயில் மற்றும் உள் பிரகாரத்தில் வரையப்பட்டிருந்தது.

அதில் தாமரைப்பூக்கள் பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் என கருதிய ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி அதனை அழிக்குமாறு கோவில் செயல் அலுவலரிடம் கூறி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து கோவில் பணியாளர்கள் சுண்ணாம்பு கலவையால் தாமரை பூ சின்னத்தை அழித்தனர். அந்த இடத்தில் வேறு கோலம் வரையப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயர் கூறுகையில், தாமரை பூ ஓவியத்தை அழித்தது கண்டனத்துக்குரியது. தாமரை என்பது தாயாரின் அவதார பூ. கோவிலுக்குள் வந்து ஓவியங்களை அழிக்க தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை. இந்த வி‌ஷயத்தில் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

தாமரை கோலம் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் வேறு கோலம் வரையப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓவியங்கள் அழிக்கப்பட்டது குறித்து விருதுநகர் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சிவஞானத்திடம் கேட்டபோது, ஆண்டாள் கோவிலில் தாமரை பூ கோலம் அழிக்கப்பட்டது குறித்து விசாரித்து வருகிறோம்.

கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்வதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் நிரந்தரமாக போடப்பட்ட பெயிண்ட் கோலத்தை அழித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தாமரை சின்னம் தேர்தல் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் வரக்கூடும் என கோவில் நிர்வாகத்திடம் போலீஸ் டி.எஸ்.பி. அறிவுரைதான் கூறியுள்ளார். கோவில் நிர்வாகத்தினர்தான் கோலங்களை அழித்துள்ளனர். யாரும் கோவில் நிர்வாகத்திடம் வற்புறுத்தவில்லை. தாமரை பூ கோலம் அழிக்கப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றார். #LSPolls SrivilliputhurTemple
Tags:    

Similar News