செய்திகள்

ஓசூர் டோல்கேட் அருகே லாரியில் எரிசாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது - 18,150 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

Published On 2019-03-09 14:23 GMT   |   Update On 2019-03-09 14:23 GMT
ஓசூர் டோல்கேட் அருகே எரிசாராயம் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தையும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியையும் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டோல்கேட் அருகே உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. அந்த லாரியை மதுவிலக்கு பிரிவு போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது லாரியில் 530 கேனில் எரிசாராயம் கடத்தப்பட்டது தெரியவந்தது.

அந்த லாரியை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் குட்டறைப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 41) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் திண்டிவனம் வேலகம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் உடன் வந்திருந்தார்.

2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் டெல்லியில் இருந்து வேலூருக்கு 530 கேன்களில் எரிசாராயம் கடத்தி வந்ததை ஒப்பு கொண்டனர். ஒரு கேனில் 35 லிட்டர் வீதம் 530 கேன்களில் 18 ஆயிரத்து 150 லிட்டர் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தையும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News