செய்திகள்

நாகர்கோவிலுக்கு வரும் பிரதமர் மோடியை முற்றுகையிட்டு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்- உதயகுமார்

Published On 2019-02-26 10:20 GMT   |   Update On 2019-02-26 10:20 GMT
வருகிற 1-ந்தேதி நாகர்கோவில் வரும் பிரதமர் மோடியை முற்றுகையிட்டு கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நெல்லை:

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1, 2-வது அணு உலைகள் இயங்குகிறதா? இல்லையா? என்பது தெரியும் முன்பே 3, 4, 5, 6 என அணு உலை பூங்கா அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது. இந்த அணு உலை பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

குமரி மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கோவளம், மணக்குடி சரக்கு பெட்டக துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும். இந்த 3 பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி தென்தமிழகத்தை காப்போம் என்ற தலைப்பில் பாளை நூற்றாண்டு மண்டபம் அருகே வருகிற 1-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பு சார்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக போலீசாரிடம் முறைப்படி அனுமதி கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை அனுமதி தரவில்லை. அனுமதி மறுக்கப்பட்டால் வருகிற 1-ந்தேதி நாகர்கோவில் வரும் பிரதமர் மோடியை முற்றுகையிட்டு கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம். பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் இந்த 3 கோரிக்கைகளையும் முன்வைத்து பிரசாரம் செய்ய வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி நீண்ட காலம் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசின் சிபாரிசுக்கு கவர்னர் முட்டுக்கட்டை போடுவது கண்டிக்கத்தக்கது. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். உடனே அவரை கண்டுபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அகில இந்திய மக்கள் மேடை நிர்வாகி வக்கீல் ரமேஷ், எஸ்.டி.பி.ஐ. கட்சி அப்துல் கனி, த.மு.மு.க. ரசூல், த.ம.ஜ.க. அப்துல் ஜபார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து மாயமாகியிருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டு பிடிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Tags:    

Similar News