செய்திகள்

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் 7-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற குடிபோதை வாலிபர்

Published On 2019-02-20 16:03 IST   |   Update On 2019-02-20 16:03:00 IST
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் 7-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற குடிபோதை வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை நகரின் மையப்பகுதியில் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கிருந்து தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் கூட்டமும் அதிகளவில் இருக்கும். இதனால் எப்போதும் பழைய பஸ் நிலையம் பரபரப்பாக இருக்கும்.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவிகள் வீட்டுக்கு செல்வதற்காக பழைய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு வாலிபர் பயங்கர தோற்றத்துடன் குடிபோதையில் அங்கும், இங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். திடீரென அந்த வாலிபர் மாணவிகள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்த 7-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம், நான் தான் உன் தந்தை, என் கூட வா, வீட்டுக்கு போகலாம் என்று கூறினார். இதை கேட்டு அந்த மாணவி மட்டுமில்லாது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது மாணவியின் கையை பிடித்து கடத்தி செல்ல முயன்றார். அதிர்ச்சியடைந்த மாணவி காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரிடம் இருந்து மாணவியை பத்திரமாக மீட்டனர். அப்போதும் அவர் குடிபோதையில் உளறியப்படி இருந்தார்.

இதனால் அந்த வாலிபர் குழந்தைகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகம் அடைந்து பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இது பற்றி தஞ்சை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரிடம் விசாரித்தனர்.

போலீசார் விசாரணையில் அவர் அளவுக்கதிகமான குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் பழைய பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News