செய்திகள்
கொலை செய்யப்பட்ட திருநங்கை ராசாத்தி

தூத்துக்குடியில் திருநங்கை கொலை: பூசாரி-நண்பரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

Published On 2019-02-17 04:21 GMT   |   Update On 2019-02-17 04:21 GMT
தூத்துக்குடியில் தலை துண்டித்து திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவில் பூசாரி மற்றும் அவரது நண்பரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கப்புரத்தை சேர்ந்தவர் ராஜாமான்சிங் என்ற ராசாத்தி (வயது 38). திருநங்கையான இவர் தாளமுத்துநகர் முருகன் தியேட்டர் அருகே உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் பூசாரியாகவும், கோவில் நிர்வாகத்தை கவனித்தும் வந்தார்.

இவருக்கும், அந்த கோவிலில் ஏற்கனவே பூசாரியாக இருந்த பூபால்ராயர்புரத்தை சேர்ந்த பாண்டி மகன் மருது(26) என்பவருக்கும் கோவிலில் பூஜை செய்வது, நிர்வாகத்தை கவனித்து கொள்வது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. தற்போது அந்த கோவிலில் கொடை விழா நடக்க உள்ளது. அதற்காக ராசாத்தி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நன்கொடை வசூல் செய்து கோவில் கொடை விழாவிற்கு பத்திரிகை அடித்துள்ளார்.

அந்த பத்திரிகையில் மருதுவின் பெயரை போடவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மருது தனது நண்பருடன் நேற்று முன்தினம் மாலையில் கோவிலுக்கு சென்றார். அங்கு கோவில் முன்பு நின்று கொண்டிருந்த ராசாத்தியிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து படுகொலை செய்தார்.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில், வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, சங்கர், ஞானராஜ், ஜீவமணி தர்மராஜ் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு காட்டு பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அதற்குள் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

தலைமறைவாக உள்ள பூசாரி மருது மற்றும் அவரது நண்பரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News