செய்திகள்

தஞ்சை அருகே விபத்து- தாறுமாறாக வந்த கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி

Published On 2019-02-17 09:36 IST   |   Update On 2019-02-17 09:36:00 IST
தஞ்சை அருகே பஸ்சுக்காக காத்திருந்த போது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்:

திருச்சி கள்ளர் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கவுரி (வயது 56).

இவர் தனது உறவினர்களான புதுக்கோட்டை வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்த கருப்பையன் (55), மாரிமுத்து (65) ஆகியோருடன் நேற்று மாலை தஞ்சைக்கு வந்தார்.

தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அவர்கள் 3 பேரும் வந்திருந்தனர். பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3 பேரும் இரவு 11.30 மணியளவில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அந்த சமயத்தில் தஞ்சையில் இருந்து பாபநாசம் உடையார் கோவிலுக்கு ஒரு கார் தாறுமாறாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார், திடீரென பஸ்சுக்காக காத்திருந்த கவுரி, கருப்பையா, மாரிமுத்து ஆகிய 3 பேர் மீதும் மோதியது. இதில் கவுரி, கருப்பையா ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மாரிமுத்து காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் மாரிமுத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து பற்றி தஞ்சை தாலுகா போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கவுரி, கருப்பையா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் , பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ரமணி (48) என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News