செய்திகள்

நளினி, முருகனை காப்பாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

Published On 2019-02-14 11:30 GMT   |   Update On 2019-02-14 11:30 GMT
வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகனை காப்பாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி தாயார் பத்மாவதி மனு தாக்கல் செய்துள்ளார். #nalinimurugan #rajivgandhi #vellorejail
சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.

7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 8-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9-ந்தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து 6-வது நாளாக அவர் உண்ணாவிரம் இருந்து வருகிறார்.

சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக 2 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகன் ஆகியோரை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று நளினியின் தாயார் பத்மாவதி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நளினி தாயார் பத்மாவதி தாக்கல் செய்த மனு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகன் ஆகியோரை காப்பாற்ற கோரி தமிழக அரசு, டிஜிபி, சிறைத்துறையிடம் நளினி தயார் பத்மா ஏற்கனவே மனு அளித்துள்ளார்.  #nalinimurugan #rajivgandhi #vellorejail 
Tags:    

Similar News