செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் போராட்டம் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது- கிரண்பேடி கண்டனம்

Published On 2019-02-13 13:09 GMT   |   Update On 2019-02-13 13:09 GMT
புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஹெல்மெட்டை உடைத்து நடத்திய போராட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று கவர்னர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார். #governorkiranbedi

புதுச்சேரி:

புதுவையில் ஹெல்மெட் கட்டாயத்தை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரிமணிகண்டன் ஆகியோர் சட்டமன்ற வளாகத்தில் ஹெல்மெட்டை தரையில் போட்டு உடைத்தனர்.

இது சட்டவிரோதமானது என கிரண்பேடி வாட்ஸ்- அப்பில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், புதுவையில் உயர் நீதிமன்ற உத்தரவு படி தான் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கட்டாய ஹெல்மெட் தொடர்பாக போதிய விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது. இனியும் ஹெல்மெட் அணியாமல் அடம் பிடிப்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்.

மேலும், தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் அபராதம் செலுத்துவோர்களின் ஓட்டுனர் உரிமம் முடக்கப்படும்.

புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஹெல்மெட்டை உடைத்து நடத்திய போராட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தி உள்ளோம்.

இதை கட்டாயப்படுத்தாமல் இருப்பது, தளர்த்தி அமல்படுத்துவது சட்டப்படி குற்றம். கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அரசியல் தலைவர்கள், இச்சட்டத்தை அமல்படுத்த தடையாக இருக்கின்றனர். சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

மத்திய மோட்டார் வாகன சட்டம், நீதிமன்ற தீர்ப்பு ஆகியவை சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் ஆகும். சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளால் நாம் கட்டுப்படத்தப்பட்டு உள்ளோம்.

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த முதல்-அமைச்சர் தடையாக இருப்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். இச்சட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News