செய்திகள்
நெற்பயிர்கள் சரிந்து கிடக்கும் காட்சி.

வாசுதேவநல்லூர் பகுதியில் கனமழை - 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்

Published On 2019-02-12 11:36 IST   |   Update On 2019-02-12 11:36:00 IST
வாசுதேவநல்லூர் பகுதியில் பெய்த கனமழையால் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். #Paddy #Farmers
சிவகிரி:

வாசுதேவநல்லூர் மற்றும் தேனை சுற்றியுள்ள சிந்தாமணி பேரிப்புதூர், ஆத்துவழி, சுப்பையாபுரம், நாரணபுரம், ஏமன்பட்டி, கூடம்பட்டி, கீழப்புதூர், சங்கனாப்பேரி, வெள்ளாணைக்கோட்டை, தாருகாபுரம், மலையடிகுறிச்சி, நெல்கட்டும்செவல் கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடை செய்து முடித்து விட்டனர்.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு சுமார் 4 மணி நேரம் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் அறுவடைக்கு காத்திருந்த மீதி வயல்கள் முழுவதும் நீர் சூழ்ந்து நெற்கதிர்கள் முற்றிலும் தலையோடு சாய்ந்துவிட்டன. இதனால் இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெற்பயிர்களை அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

நாற்று நடுவை முதல் அறுவடை காலம் வரை 5 மாதங்கள் ஆகின்றன. ஒரு ஏக்கர் நெல் பயிரிட விவசாயிகள் சுமார் ரூ. 20 ஆயிரம் செலவு செய்கின்றோம். செழிப்பாக மகசூல் கிடைத்தால் ஒரு ஏக்கரில் சுமார் 30 மூட்டைகளை அதாவது 35 ஆயிரம் வருவாய் கிடைக்கும். இந்நிலையில் பருவம் தவறி பெய்த இந்த கனமழையால் வயல் முழுவதும் நீர் சூழ்ந்து நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்துவிட்டன.

இதன் காரணமாக பாதி நெல் மணிகள் உதிர்ந்துவிட்டன. இன்னும் 10 நாட்களுக்கு வெயில் அடித்தால் தான் அறுவடை எந்திரம் வயலுக்குள் செல்லமுடியும். அதே நேரத்தில் பாதி நெற்பயிர்கள் வீணாகிவிட்டதால் ஏக்கருக்கு 15 மூட்டை தான் கிடைக்கும். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என்றனர்.

இப்பகுதியில் சில விவசாயிகள் தங்கள் நெற்பயிர்களை பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்துள்ளனர். எனவே கனமழையினால் ஏற்பட்ட இழப்பை உரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  #Paddy #Farmers
Tags:    

Similar News