செய்திகள்
உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்து வரும் ஜெயின் பெண் துறவி.

உணவு, தண்ணீர் அருந்தாமல் ஜீவ சமாதிக்காக காத்திருக்கும் 72 வயது பெண் துறவி

Published On 2019-02-05 08:29 IST   |   Update On 2019-02-05 08:29:00 IST
திருவண்ணாமலை மாவட்டம் திருமலை அரிஹந்தகிரி மடத்தில் ஜெயின் மதத்தை சேர்ந்த 72 வயது பெண் துறவி, ஜீவசமாதி அடைவதற்காக உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்து வருகிறார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட திருமலை கிராமத்தில் திருமலை ஜெயினர் மடம் உள்ளது. போளூர் தாலுகாவுக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 72 வயதான மாதாஜி என்கிற ஜெயின் துறவி வந்துள்ளார். அவர் இங்கு ஜீவசமாதி அடைவதற்காக உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்து வருகிறார். இன்னும் 2 நாளில் அவர் ஜீவசமாதி அடைந்து விடுவார் என தகவல் பரவியதால் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் மாதாஜியிடம் அருளாசி பெற்று வருகின்றனர்.

இது குறித்து திருமலை ஜெயின் மடாலய மடாதிபதி தவளகீர்த்தி சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

பவாரிதேவி என்கிறவர் கடந்த 2010-ல் தாய், தந்தையர், கணவரையும் துறந்தார். பின்னர் ஜெயின் மதத்தில் துறவியானார். அவர் சுல்லிகா ஸ்ரீ 105 ஸ்ரீசுகுந்தன்மதி மாதாஜி என்ற பெயருடன் கடந்த 18 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள ஜெயின் ஆலயங்களுக்கு சென்று பல ஊர்களில் ஜெயின் மதத்தின் பெருமைகளை விளக்கி வருகிறார்.

இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி மாதாஜியாக தீட்சை பெற்றார். இவரது தாயார் பெயர் சோசார்பாய், தந்தை ராம்சந்திரசுக்குவால், கணவர் பெயர் கன்யாலால் ஜெயின். இவர் பிறந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் லக்னாபூர், சவாயி மத்பூர் ஆகும்.

இவர் கடந்த 31-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் வந்தார். திருமலை அரிஹந்தகிரி ஜெயின் மடத்தில் வந்து தங்கியுள்ள அவர், விரைவில் ஜீவ சமாதி ஆவதாக கடந்த 4 நாட்களாக உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்து வருகிறார். அவரை தற்போது 12 மாதாஜிகள் கவனித்து வருகின்றனர். இரண்டொரு நாட்களில் ஜீவ சமாதி அடைந்துவிடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News