செய்திகள்
கோப்புப்படம்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு சிறுத்தை குட்டியை விமானத்தில் கடத்திய வாலிபர் கைது

Published On 2019-02-02 09:43 GMT   |   Update On 2019-02-02 09:43 GMT
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு சிறுத்தை குட்டியை விமானத்தில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு தாய் ஏர்வேஸ் விமானம் வந்தது. இதில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த முகைதீன் என்பவர் கையில் மூங்கில் கூடை எடுத்து வந்தார்.

அதில் என்ன உள்ளது என்று சுங்க அதிகாரிகள் கேட்டபோது ‘வளர்ப்பு பிராணி’ உயர் ரக நாய் குட்டியை கொண்டு வருகிறேன் என்றார். அதன் மீது கர்ச்சீப் போட்டு மூடி இருந்ததால் அதை அதிகாரிகள் அகற்றி பார்த்தனர்.

அப்போது கூடைக்குள் சிறுத்தை குட்டி இருந்ததை கண்டு பிடித்தனர். இதை விமானத்தில் கொண்டு வருவதற்கு உரிய சான்றிதழ் ஏதும் இல்லாததால் அதை அங்கேயே பறிமுதல் செய்தனர்.

உடனடியாக மத்திய வன காப்பக குற்றபிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்து முகைதீனை ஒப்படைத்தனர். அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுத்தை குட்டியை வீடுகளில் வளர்க்க இந்தியாவில் தடை உள்ள நிலையில் இதை சென்னையில் யாருக்காக கொண்டு வந்தார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

வன உயிரின காப்பக அனுமதியோ, சுகாதார துறை அனுமதி சான்றிதழ் எதுவும் இல்லாததால் சிறுத்தை குட்டியை தாய்லாந்து நாட்டுக்கு விமானத்தில் திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News