செய்திகள்
முகாம் சென்று திரும்பிய கஸ்தூரி யானை

புத்துணவுர்வு முகாம் முடிந்து பழனி கோவிலுக்கு திரும்பிய கஸ்தூரி யானை

Published On 2019-01-31 07:57 GMT   |   Update On 2019-01-31 07:57 GMT
புத்துணர்வு முகாம் முடிந்து பழனி கோவில் யானை கஸ்தூரி இன்று பழனிக்கு வந்தது. #RejuvenationCamp
பழனி:

தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றுப்படுகையில் இந்த முகாம் கடந்த டிசம்பர் 14-ந் தேதி தொடங்கியது.

வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே நடந்த இந்த முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 28 யானைகள் பங்கேற்றன. யானைகள் புத்துணர்வு பெறும் வகையில் காலை, மாலை 2 வேளையும் நடை பயிற்சி, ‌ஷவர் குளியலில் ஈடுபட்டன.

யானைகளுக்கு சமச்சீர் உணவு, பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவ குழுவினர் 2 வேளையும் யானைளுக்கு மருத்துவ பரிசோதனை அளித்து வந்தனர்.

48 நாட்கள் நடந்த இம்முகாம் நேற்று நிறை வடைந்தது. இதனையடுத்து யானைகள் அனைத்துக்கும் பழம், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டு அந்தந்த கோவில்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கண்ணீர் மல்க ஒவ்வொரு யானையும் பிரியாவிடை கொடுத்து சொந்த ஊருக்கு திரும்பின.

பழனி கோவில் யானை கஸ்தூரி தனி லாரி மூலம் இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தது. அதற்கு கோவில் நிர்வாகம் சார்பிலும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து உற்சாக வரவேற்பு தந்தனர். முகாமுக்கு செல்லும்போது யானையின் எடை 4 ஆயிரத்து 890 கிலோவாக இருந்தது. தற்போது 40 கிலோ எடை குறைந்து 4850 கிலோ எடை உள்ளது. முகாமில் பழனி கோவில் யானை பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதுடன் மற்ற யானைகளுடன் கலகலப்பாக செயல்பட்டது என பாகன்கள் பிரசாந்த் மற்றும் சங்கரன்குட்டி தெரிவித்தனர். யானைகளுக்கு மட்டுமின்றி பாகன்களுக்கும் புத்துணர்வு முகாமில் போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

யானையின் உடல்நிலை முகாமுக்கு சென்று திரும்பிய பிறகு மிகவும் ஆரோக்கியமாக உள்ளது என கால்நடை மருத்துவர் முருகன் தெரிவித்தார். 48 நாட்கள் முகாமில் பங்கேற்று பழனிக்கு திரும்பிய கஸ்தூரி யானைக்கு கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையில் பக்தர்கள் பிரசாதங்கள் வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  #RejuvenationCamp



Tags:    

Similar News