செய்திகள்
ஊட்டி கோர்ட்டில் ஆஜராக வந்த ‌சயான்-மனோஜ்

கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு: ஊட்டி கோர்ட்டில் சயான், மனோஜ் ஆஜர்

Published On 2019-01-29 07:23 GMT   |   Update On 2019-01-29 07:23 GMT
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட ‌சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் இருவரும் இன்று ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். #Kodanadissue #Sayan #Manoj
கோவை:

நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட ‌சயான், மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

அவர்களின் ஜாமீனை ரத்து செய்யகோரி அரசு சார்பில் கடந்த 16-ந்தேதி அரசு வக்கீல் நந்தகுமார் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி வடமலை விசாரித்து ‌சயான், மனோஜ் ஆகியோர் 24 -ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறி சம்மன் அனுப்பினார்.

ஆனால் கடந்த 24-ந்தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வரவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல் செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார். அதில் ‌சயான், மனோஜ் ஆகியோர் ஆஜராக போதிய அவகாசம் கிடைக்காததால் ஆஜராக முடியவில்லை.

எனவே அவகாசம் நீடித்து தர வேண்டும் என்று கூறினார். அதன் படி அவர்களின் கால அவசாகத்தை இன்று (29-ந்தேதி) வரை நீதிபதி வடமலை நீடித்தார்.

இதற்கிடையே இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ‌சயான்,மனோஜ் ஆகியோர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏற்கனவே 20 முறைக்கு மேல் இந்த வழக்கிற்காக நேரில் ஆஜராகி உள்ளதால் ஊட்டி கோர்ட்டு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

இதனை ஏற்க மறுத்த ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த வேங்கடேசன் விசாரணைக்கு அழைக்கும் போது நேரில் ஆஜராவதாக கூறி ஜாமீன் பெற்றதை சுட்டிக்காட்டி கோரிக்கையை விசாரணை நீதிமன்றத்தின் முன் வைக்குமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதனை தொடர்ந்து மனுவை நேற்று திரும்ப பெற்றுக் கொண்டு ‌சயான், மனோஜ் இருவரும் இன்று ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

அவர்களை வருகிற 2-ந்தேதி ஆஜராகும் படி நீதிபதி வடமலை உத்தரவிட்டார். அன்று கொடநாடு கொலை , கொள்ளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. #Kodanadissue #Sayan #Manoj
Tags:    

Similar News