செய்திகள்

கூலிப்படையை ஏவி 2 ரவுடிகளை தீர்த்துக்கட்டிய பெண் 5 மாதத்துக்கு பிறகு கைது

Published On 2019-01-24 05:26 GMT   |   Update On 2019-01-24 05:26 GMT
ஊத்துக்கோட்டை அருகே மைத்துனரை கொன்றவர்களை பழிவாங்க கூலிப்படையை ஏவி 2 ரவுடிகளை தீர்த்துக்கட்டிய பெண்ணை 5 மாதத்துக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை ஊராட்சியில் உள்ள காட்டுச்செல்லி அம்மன் கோவில் அருகே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி காஞ்சீபுரத்தை அடுத்த விளாம்பாக்கத்தை சேர்ந்த விக்கி (வயது 22), மண்ணிவாக்கத்தை சேர்ந்த சத்யா(27) ஆகிய 2 ரவுடிகள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 6 பேர் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்படி நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த சூர்யா, துராபள்ளம் அன்பு உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சூர்யாவின் தம்பி உதயாவின் கொலைக்கு பழிக்குப்பழியாக ரவுடிகள் விக்கி, சத்யா ஆகியோர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். 5 மாதத்துக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.

மைத்துனர் உதயா கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க அவர் கூலிப்படையை ஏவி ரவுடிகள் 2 பேரையும் தீர்த்து கட்டியது விசாரணையில் தெரிய வந்தது.

சூர்யாவின் தம்பி உதயா கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதில் விக்கி, சத்யா முக்கிய குற்றவாளிகளாக இருந்தனர். அவர்களை தீர்த்துக்கட்ட சூர்யா திட்டமிட்டிருந்தார். இதற்குள் வேறொரு வழக்கு சம்பந்தமாக சூர்யா கைதாகி சிறைக்கு சென்று விட்டார். இதனால் தம்பியை கொன்றவர்களை பழி வாங்க முடியாமல் இருந்தார்.

இதற்கிடையே கொலையுண்ட விக்கியும், சத்யாவும் துராபள்ளம் கிராமத்தை சேர்ந்த ரவுடி அன்புவிடம் கூட்டாளிகளாக சேர்ந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்பு வேறொரு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றார்.

அங்கு சூர்யாவுக்கும், அன்புவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சூர்யா தனது தம்பியை கொலை செய்தவர்கள் குறித்து அன்புவிடம் தெரிவித்தார். அவர்கள் தன்னிடம் கூட்டாளிகளாக இருப்பது குறித்து அன்பு அவரிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து ரவுடிகள் விக்கி, சத்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இருவரும் ஜெயிலில் இருந்ததால் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை இருந்தது.

இதைத்தொடர்ந்து சூர்யா வெளியில் இருக்கும் தனது மனைவி விஜயலட்சுமி மூலம் கொலை திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.

இதுபற்றி ஜெயிலில் சந்திக்க வந்த மனைவி விஜயலட்சுமியிடம் தெரிவித்தார். கணவரின் திட்டப்படி மைத்துனரை கொன்றவர்களை தீர்த்து கட்ட விஜயலட்சுமி கூலிப்படையை ஏவினார். அவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் ரவுடிகள் விக்கி, சத்யாவை தீர்த்துக்கட்டி விட்டனர். இந்த கொலைக்கு அன்புவும் உடந்தையாய் இருந்தார். அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த விஜயலட்சுமி அன்புவின் மனைவியை சந்திக்க வந்த போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

இரட்டைக்கொலையில் சூர்யா, அவரது மனைவி விஜயலட்சுமி, அன்பு உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி பாராட்டினார்.
Tags:    

Similar News