செய்திகள்

அரும்பாக்கத்தில் இன்று ரவுடி வெட்டிக்கொலை

Published On 2019-01-21 08:26 GMT   |   Update On 2019-01-21 08:26 GMT
அரும்பாக்கத்தில் இன்று ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரூர்:

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வைஷ்ணவா கல்லூரி அருகில் இன்று காலை 10.45 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டப் பட்டதை பார்த்து அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பலர் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக வெட்டுப்பட்ட வாலிபரும் ஓட்டம் பிடித்தார். ஆனால் மர்ம நபர்கள் அவரை விடாமல் துரத்திச் சென்று வெட்டிக்கொன்றனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அரும்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்டது சூளைமேட்டை சேர்ந்த ரவுடி குமரேசன் என்பது தெரிய வந்தது. வழக்கு ஒன்றில் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பியபோதுதான் அவரது எதிரிகள் பின் தொடர்ந்து வந்து குமரேசனை தீர்த்து கட்டியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட குமரேசன் மீது சூளைமேடு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு சென்று விட்டு திரும்பியபோதுதான் பழிக்குபழி வாங்கும் வகையிலேயே குமரேசன் கொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் கமி‌ஷனர் தினகரன், அண்ணாநகர் துணை கமி‌ஷனர் சுதாகர் ஆகியோரது மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கத்தில் தொடங்கி கோயம்பேடு வரை சமீபத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

அந்த கேமராக்களில் கொலைக் காட்சிகள் பதிவாகி இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அதனை வைத்து கொலையாளிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News