செய்திகள்

இன்னும் 18 மாதங்களில் மதுரை நகரம் ‘சிட்னி’யாக மாறும்- செல்லூர் ராஜூ பேச்சு

Published On 2019-01-19 10:47 GMT   |   Update On 2019-01-19 10:47 GMT
மதுரையில் இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, இன்னும் 18 மாதங்களில் மதுரை நகரம் ‘சிட்னி’யாக மாறும் என்று கூறினார். #SmartCity #MaduraiSmartCity #ministersellurraju

மதுரை:

மதுரையில் இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

மறைந்த முதல்வர் அம்மா மதுரை நகரை சர்வதேச நகரமாக மாற்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

அனைத்து தரப்பு மக்களும் நலமுடன் வாழ தேவையான வசதிகளை அரசு செய்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சிட்னி நகரை போல் மதுரையை சர்வதேச நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினேன். இதை சிலர் ஏளனமாக பேசினார்கள். சமூக வலைதளங்ககளில் கொச்சை கருத்துக்களும், கேலி கிண்டல்களும் செய்யப்பட்டன.

ஆனால் இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் இடம் பெற்று அதற்குரிய வகையில் பெரியார் பஸ் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர் மகால் போன்ற பகுதிகள் மேம்படுத்தப்பட்டு மதுரை நகரம் நவீனமயமாக்கப்பட உள்ளது.

இன்னும் 18 மாதங்களில் இந்த திட்டப்பணிகள் முடிவடையும். இது நிறைவு பெற்றபின் நான் கூறியது போல் மதுரை நகரம் சிட்னியாக மாறும். எனவே மக்கள் நலம் பேணும் இந்த அரசுக்கு பொதுமக்கள் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களின் உரிமைகளை பேணும் பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார். மறைந்த முதல்வர் அம்மா வழியில் அவர் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.

முதல்வர் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு மதிப்பு அளித்து அனைத்து திட்டங்களையும் மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

முதல்வரும், துணை முதல்வரும் இரட்டை குழல் துப்பாக்கியாக இருந்து இந்த ஆட்சியை நடத்தி வருகிறார்கள். துணை முதல்வர் மதுரையை தனது தாய் மண் போல் நேசிக்கிறார். தேனியை விட மதுரையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வர முனைப்புடன் பணியாற்றி வருகிறார்.

வருகிற 27-ந் தேதி பிரதமர் மோடி எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுக்காக மதுரை வருகிறார். தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான எய்ம்ஸ் ரூ. 1,300 கோடியில் தோப்பூரில் அமைய உள்ளது. இது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

மதுரை மண்ணுக்கு வளர்ச்சி திட்டப்பணிகள் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கிறது. இதை செயல்படுத்தி மக்கள் நலன் காக்கும் இந்த அரசுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார். #SmartCity #MaduraiSmartCity #ministersellurraju

Tags:    

Similar News