செய்திகள்

பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி சிவகாசி பகுதியில் கஞ்சித் தொட்டி திறப்பு

Published On 2019-01-19 05:10 GMT   |   Update On 2019-01-19 05:10 GMT
பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி சிவகாசி பகுதியில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் இன்று கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன.

சிவகாசி:

பட்டாசு தொழிலுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக அந்த தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி பட்டாசு ஆலை அதிபர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்ட 1070 பட்டாசு ஆலைகளும், மூடப்பட்டதால், சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சமூக நல அமைப்புகள் வலியுறுத்தின.

பட்டாசு ஆலை தொழிலாளர்கள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. கலெக்டர் ஆபீஸ் முற்றுகை போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இருப்பினும் இதுவரை பட்டாசு ஆலைகள் திறக்கப்படவில்லை. அரசு சார்பில் நடந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் மூடப்பட்ட ஆலைகளை திறக்க வலியுறுத்தியும் தொழிலாளர்கள் நலனுக்காகவும், 2 நாட்கள் கஞ்சி தொட்டியை திறக்க சி.ஐ.டி.யூ. பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்தது.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இன்று கஞ்சி தொட்டி திறக்கப்பட்டது. என்.துரைச்சாமிபுரம், துலுக்கன்குறிச்சி, வெம்பக்கோட்டை, சல்வார்பட்டி, மீனாட்சிபுரம், வெற்றிலையூரணி, விஜயகரி கல்குளம், ராமலிங்காபுரம் உள்பட 20 இடங்களில் கஞ்சித்தொட்டி திறந்தனர்.

இதேபோல் நாளை (20-ந் தேதி) செங்கிமலைப்பட்டி, ஆலாவூரணி உள்பட 40 இடங்களில் கஞ்சித்தொட்டி திறக்கப்படுகிறது.

Tags:    

Similar News