செய்திகள்

உயிருக்கு போராடும் தந்தையிடம் ஆசிபெற மருத்துவமனையில் நடந்த மகன் திருமணம்

Published On 2019-01-19 04:01 GMT   |   Update On 2019-01-19 04:01 GMT
உயிருக்கு போராடும் தந்தையிடம் ஆசி பெறுவதற்காக மகன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #Stanleyhospital #Marriage
பிராட்வே:

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் சுதேஷ் (வயது 60). வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், பிரகாஷ், சரவணன், சதீஷ்(28) ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

சதீசுக்கும், திருவொற்றியூர் சன்னதி தெருவைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு, அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற சுதேஷ் மீது அந்த வழியாக சென்ற மின்சார ரெயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுதேஷ், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் அகற்றப்பட்ட நிலையில் அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். இன்று (சனிக்கிழமை) அதிகாலை அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர். அறுவை சிகிச்சையில் ஏதும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் தனது தந்தை கண் முன்னே தனது திருமணம் நடக்காதே?, அவரிடம் ஆசீர்வாதம் பெற முடியாதே? என சதீஷ் மனம் குமுறினார்.

தனது தந்தை இருக்கும்போதே அவரது கண் எதிரேயே தனது திருமணத்தை நடத்த வேண்டும் என தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். தந்தை மீதான அவரது பாசத்தை பார்த்து நெகிழ்ந்த இருவீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.



இதையடுத்து சதீஷ் நேற்று இரவு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருவீட்டார் ஒத்துழைப்புடன் உறவினர்கள் முன்னிலையில் சித்ராவின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

தந்தை பாசத்தில் மகன் செய்த இந்த திருமண நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. #Stanleyhospital #Marriage
Tags:    

Similar News