செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சிறந்த காளை, சிறந்த வீரருக்கு எடப்பாடி-ஓபிஎஸ் சார்பில் கார்கள் பரிசு

Published On 2019-01-17 03:21 GMT   |   Update On 2019-01-17 03:21 GMT
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ள காளைகளில் சிறந்த காளை மற்றும் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சார்பில் கார்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. #Jallikattu #AlanganallurJallikattu
அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. அமைச்சர் உதயகுமார் மற்றும் ஆட்சியர் நடராஜன் ஆகியோர் பச்சைக் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகளை அடக்க காளையர்கள் களத்தில் ஆக்ரோஷமாக களமிறங்கி உள்ளனர். இன்றைய ஜல்லிக்கட்டில் 1400 காளைகள் பங்கேற்றுள்ளன. காளைகளை அடக்குவதற்கு சுமார் 848 வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.

ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரருக்கும், காளையர்களின் பிடியில் சிக்காமல் சீறிப்பாயும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இருசக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இன்றைய ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்களில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஒரு கார் பரிசாக வழங்கப்படுகிறது. இதேபோல் சிறந்த காளைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஒரு கார் பரிசு வழங்கப்படுகிறது. இத்தகவலை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.



ஜல்லிக்கட்டு போட்டிகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்காக மதுரை எஸ்பி தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Jallikattu #AlanganallurJallikattu
Tags:    

Similar News