செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வீரர் காயம்- சிகிச்சைக்கு மறுத்து வெளியேறினார்

Published On 2019-01-16 04:38 GMT   |   Update On 2019-01-17 03:02 GMT
பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டியின்போது காயமடைந்த வீரர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்து வெளியேறினார். #Jallikattu #BullTamerInjured
பாலமேடு:

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 900 காளைகள் பங்கேற்றுள்ளன. காளைகளை அடக்குவதற்கு சுமார் 800 வீரர்கள் களமிறங்கி உள்ளனர். காளைகளை அடக்கும் வீரருக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இன்றைய ஜல்லிக்கட்டில் பெரும்பாலான பரிசுகள் காளை வளர்ப்போருக்கு சென்றவண்ணம் உள்ளன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகள், மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் மிரட்டுவதை காண முடிகிறது. சில காளைகள், வீரர்களை ஆக்ரோஷமாக முட்டி தாக்கின.



இவ்வாறு காளைகளை அடக்க முயன்று காயமடைந்த வீரர்களுக்கு, அங்குள்ள மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்து வருகின்றனர். தேவைப்பட்டால், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அவ்வகையில் காளை முட்டியதில் பலத்த காயமடைந்த ஒரு வீரருக்கு, மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

ஆனால், காயமடைந்த வீரர், அரசு மருத்துவமனைக்கு செல்ல மறுத்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதாக கூறி அந்த இடத்தில் இருந்து அவசரம் அவசரமாக சென்றுவிட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #Jallikattu #BullTamerInjured
Tags:    

Similar News