செய்திகள்

வேலூரில் சென்னை ரியல் எஸ்டேட் உரிமையாளரை கடத்தி ரூ.26 லட்சம் பறித்த 2 பேர் கைது

Published On 2019-01-14 13:51 IST   |   Update On 2019-01-14 13:51:00 IST
வேலூரில் சென்னை ரியல் எஸ்டேட் உரிமையாளரை கடத்தி ரூ.26 லட்சம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

சென்னை வடபழனியை சேர்ந்தவர் வில்சன் விமல் (வயது 44). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவரை கடந்த மாதம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் தங்களை விக்னேஷ், தமிழ்செல்வன் என அறிமுகப்படுத்தி, வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நிலம் விற்பனைக்கு உள்ளது, அதனை நேரில் பார்க்க வரும்படி கூறினர்.

இதையடுத்து வில்சன்விமல் நிலத்தை வாங்க ரூ.5 லட்சத்துடன் கடந்த மாதம் தனது காரில் வேலூருக்கு வந்தார். விக்னேஷ், தமிழ்செல்வன் மற்றும் நண்பர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேர் வில்சன்விமலை தங்கள் காரில் அழைத்து சென்று சில இடங்களை காண்பித்தனர்.

பின்னர் 6 பேரும் சேர்ந்து வில்சன்விமலை தாக்கி கண்களை கட்டி காரில் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு கடத்தினர். அங்கு வைத்து ரூ.26 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து கொண்டனர். இதுதொடர்பாக வில்சன்விமல் அளித்த புகாரில் வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்தார். 2 தனிப்படை போலீசார் பெருந்துறையில் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் வாணியமபாடியை சேர்ந்த சீனிவாசன் (44), கரூரை சேர்ந்த விக்னேஷ் என்ற விஷ்வா (31) ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News