செய்திகள்
செங்கம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட பெருமாள் சிலை.

லாரியின் 15 டயர்கள் பஞ்சர் - பெருமாள் சிலை பெங்களூரு செல்வதில் மீண்டும் சிக்கல்

Published On 2019-01-10 06:01 GMT   |   Update On 2019-01-10 06:01 GMT
அம்மாபாளையத்தில் இருந்து பெருமாள் சிலை புறப்படும்போது திடீரென 15 டயர்கள் பஞ்சரானது. இதனால் சிலையை பெங்களூரு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. #Vishnustatue
செங்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில் இருந்து ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெருமாள் சிலை பெங்களூஐரு ஈஜிபுரா எனும் இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட முழுமையாக செதுக்கி முடிக்கப்பட்டதாக பிரமாண்ட பெருமாள் சிலை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது.

கொரக்கோட்டையில் இருந்து கடந்த மாதம் 7-ந்தேதி சிலையின் பயணம் தொடங்கியது. பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு திருவண்ணாமலை வந்த பெருமாள் சிலை நேற்று முன்தினம கிரிவலப் பாதையில் இருந்து திண்டிவனம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செங்கம் நோக்கி சென்றது.

இரவு 7 மணியளவில் செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் சிலை வந்தடைந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட பெருமாள் சிலையை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று அம்மாபாளையத்தில் இருந்து சிலை புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

அப்போது லாரியில் பொருத்தப்பட்டுள்ள 240 டயர்களில் 15 டயர்கள் திடீரென பஞ்சரானது. இதற்கான மாற்று டயர்கள் அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து எடுத்துவர வேண்டி உள்ளது. எனவே இந்த டயர்கள் இன்று அம்மாபாளையம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றை லாரியில் பொருத்திய பிறகுதான் மீண்டும் சிலை பயணம் தொடரும்.

இதையடுத்து இந்த சிலை கோணான்குட்டை கேட், கரியமங்கலம், கொட்டக்குளம், மண்மலை கிராமங்கள் வழியாக செங்கம் செல்ல வேண்டி உள்ளது.

ஏற்கனவே வந்தவாசியில் இருந்து பெருமாள் சிலையுடன் புறப்பட்ட லாரியின் டயர்கள், திருவண்ணாமலை வருவதற்குள் பல்வேறு இடங்களில் பஞ்சரானது.

தற்போது அம்மாபாளையத்தில் இருந்து செங்கம் இடையே உள்ள 18 கி.மீட்டர் சாலையானது குண்டும், குழியுமாகவும், மண் சாலையாகவும் உள்ளது. 3 இடங்களில் வேகத்தடை உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சாலையை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆனால் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெருமாள் சிலை இந்த 18 கி.மீ தூரத்தை கடந்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையான ஆனந்தவாடி கிராமம் வரை 30 கி.மீ தூரம், சாலை சேதமடைந்துள்ள நிலையில் உள்ளது. மேலும் 3 இடங்களில் பாலம் உள்ளது.

இதனால் பெருமாள் சிலை திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையை கடந்து செல்லவே பல நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை குறித்து சிலை கொண்டு செல்லும் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். #Vishnustatue



Tags:    

Similar News