செய்திகள்

தேக்கு மரங்கள் பதுக்கல் விவகாரத்தில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை பதிவாளரிடம் விசாரணை- 5 பேர் கைது

Published On 2018-12-21 10:35 GMT   |   Update On 2018-12-21 10:35 GMT
கஜா புயலில் சாய்ந்த தேக்கு மரங்கள் கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை பதிவாளரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். #gajacyclone

திருவாரூர்:

திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் அருகே உள்ள வெட்டாறு கரையில் வனத்துறைக்கு சொந்தமான தேக்கு மரங்கள் உள்ளன. கடந்த மாதம் வீசிய கஜா புயல் தாக்கியபோது, தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக திருவாரூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் வெட்டாற்றங்கரையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புயலில் சாய்ந்த தேக்கு மரங்கள் கடத்தப்பட்டு மத்திய பல்கலைக்கழக வளாகத்துக்குள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. இந்த மரங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக நீலக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய்த்துறை ஊழியர் பன்னீர்செல்வம், பல்கலைக்கழக காவலாளிகள் முருகேசன், சிவராமகிருஷ்ணன், பிளம்பர் தீனதயாளன், டிரைவர் கண்ணையன் ஆகிய 5 பேரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். இவர்கள் நன்னிலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழகத்தில் தேக்கு மரங்கள் பதுக்கப்பட்ட விவகாரத்தில் துணைவேந்தர் உத்தரவின்பேரில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் தொடர்புடைய ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துணை பதிவாளர் வேலுவிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அவரிடம் இருந்த 5 பொறுப்புகள் பறிக்கப்பட்டு உள்ளன.

துணை பதிவாளர் வேலுவிடம் வனத்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதன் பின்னணியில் பல்கலைக்கழகத்தில் உள்ள அதிகாரிகள் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? தேக்கு மரங்கள் யாருக்கு விற்பனை செய்யப்பட இருந்தது? என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் மேலும் சிலர் சிக்கலாம் என்று தெரிகிறது.

இதுபற்றி பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி கூறியதாவது:-

தேக்கு மரங்கள் கடத்தல் விவகாரத்தில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #gajacyclone

Tags:    

Similar News