செய்திகள்

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

Published On 2018-12-06 14:22 GMT   |   Update On 2018-12-06 14:22 GMT
டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை நீதிபதி 13ந்தேதிக்கு ஒத்திவைத்தார். #dspvishnupriyasuicidecase

கோவை:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணு பிரியா கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி தனது முகாம் அலுவலகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில் வழக்கை கைவிடுவதாக கூறி கோவை தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில் தற்கொலை செய்து கொண் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. சி.பி.ஐ. முறையாக விசாரணை நடத்தவில்லை என கூறி கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் விஷ்ணு பிரியா தற்கொலை தொடர்பாக அதிகாரிகள் டார்ச்சர் தொடர்பான ஆதாரம் இல்லை. இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றார். விஷ்ணு பிரியா தந்தை சார்பில் ஆஜரான வக்கீல் அருண்மொழி வாதாடும் போது, சி.பி.சி.ஐ.டி. விசாரித்தது போல் தான் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. இதில் உயர் அதிகாரி உள்பட 7 பேருக்கு தொடர்பு உள்ளது. அவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை தன்மை தெரியும் என்றார். 7 பேரையும் அழைத்து விசாரணை நடத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பாக வருகிற 13-ந் தேதி முடிவு செய்யப்படும் என கூறிய நீதிபதி நாகராஜ் விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார். #dspvishnupriyasuicidecase 

Tags:    

Similar News