செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி-மயக்கம்

Published On 2018-12-03 13:31 GMT   |   Update On 2018-12-03 13:31 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்டு 40 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது குமாரகுடி குளத்து மேடு. இந்த கிராமத்தை சேர்ந்த சிலர் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள்.

அவர்கள் குளத்துமேட்டு பகுதியில் ஓலை கொட்டகை அமைத்து அதில் அய்யப்பசாமி படத்தை வைத்து பூஜை நடத்தி வந்தனர். நேற்று மாலை அங்கு கன்னி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பூஜை மற்றும் பஜனை முடிந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல் போன்றவை வழங்கப்பட்டது. பிரசாதம் சாப்பிட்டுவிட்டு அனைவரும் வீடுகளுக்கு சென்றனர். சிறிது நேரத்தில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு திடீரென்று வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கத்தினர் மயங்கி விழுந்த விஜயகாந்த் (33), துரை (44), விஷால் (21), தமயந்தி (22), ராம்கி (28) உள்பட 40 பேரை 4 ஆம்புலன்சுகளில் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவில் பிரசாதம் சாப்பிட்டு 40 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News