செய்திகள்
பட்டுக்கோட்டை அருகே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லக்கண்ணு ஆறுதல் கூறிய போது எடுத்த படம்.

தென்னை மரங்களை தனித்தனியாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்- ஆர்.நல்லக்கண்ணு

Published On 2018-12-03 06:17 GMT   |   Update On 2018-12-03 06:17 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கணக்கு எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #Nallakannu
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை தாலுகாவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு சென்றும் 15 நாட்களுக்கு பிறகு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிவாரணமாக 353 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. மத்திய அரசு குறைவான தொகை ஒதுக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. புயலால் 8 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அழிந்துவிட்டன. விவசாயிகள் தங்களிடம் இருந்த பொருட்களையும் இழந்து விட்டனர். இந்த புயல் மக்களின் வாழ்வாதாரத்தையே அழித்துவிட்டது. மீனவர்கள் ஏராளமான படகுகளை இழந்து விட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து மத்திய அரசு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும்.

தென்னைக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிவாரணம் போதுமானதல்ல. தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கணக்கு எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் மின் இணைப்பு உடனே வழங்க வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வக்கீல் பாரதி, முன்னாள் மாவட்ட செயலாளர் திருஞானம், மாவட்ட விவசாய சங்க செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.  #GajaCyclone
Tags:    

Similar News