கஜா புயலால் வீட்டை இழந்த வேதாரண்யம் விவசாயி தற்கொலை
வேதாரண்யம்:
கஜா புயல் தாக்கியதில் டெல்டா மாவட்டங்கள் சின்னா பின்னாமாகி உள்ளது. 2 கோடி தென்னை, மரங்களும், லட்சக் கணக்கான ஏக்கரில் வாழை, கரும்பு, வெற்றிலை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமாகி உள்ளன.
கஜா புயல் ஒரே நாளில் தங்களது வாழ்வாதாரத்தை நீர் மூலமாக்கி விட்டு சென்றதால் டெல்டா விவசாயிகள் வேதனையில் விழிபிதுங்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிகாட்டை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜ் (45). 5 ஏக்கர் தென்னை மரங்கள் நாசமானதால் தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல் ஒரத்தநாடு அருகே கீழவன்னிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவாஜி அதிர்ச்சியில் மாரடைப்பால் பலியானார்.
இந்நிலையில் கஜா புயலால் வீட்டை இழந்த வேதாரண்யம் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
வேதாரண்யம் அருகே பெரிய குத்தகையை சேர்ந்தவர் முத்தன். இவரது மகன் கோபால் (வயது 60). விவசாயி.
கஜா புயல் தாக்கியதில் கோபாலின் கூரை வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் கடந்த 6 நாட்களாக கோபால் வேதனையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கோபால் வீட்டிற்கு அருகே உள்ள முந்திரி தோப்பில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவோணம் அடுத்த காடுவெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி செந்தாமரை (வயது 51).
இந்த நிலையில் கடந்த வாரம் வீசிய கஜா புயலில் செந்தாமரை வீடும் லேசாக சேதம் அடைந்தது. மரங்கள் முறிந்து ஆங்காங்கே கிடந்ததால் வீட்டில் இருந்த உணவை வைத்து சாப்பிட்டு வந்தார்.
இதற்கிடையே உணவும் இல்லாமல் போனதால் கவனிக்க யாருமின்றி செந்தாமரை இருந்து வந்தார். இதனால் பசியால் வாடிய செந்தாமரை வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி திருவோணம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Gajastorm