செய்திகள்
பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் உடைந்தது.

பெண்ணாடம் பகுதியில் பலத்த மழை: வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலம் உடைந்தது

Published On 2018-11-24 05:37 GMT   |   Update On 2018-11-24 05:37 GMT
பெண்ணாடம் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை கொட்டியது. வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் நள்ளிரவில் உடைந்தது. #Rain #Flood
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், பண்ருட்டி, பெண்ணாடம், திட்டக்குடி போன்ற பகுதிகளில் இரவு நேரத்தில் பலத்த மழை கொட்டியது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெண்ணாடம் அருகே சமுத்திரசோழபுரம் கிராமத்தில் வெள்ளாறு செல்கிறது.

இந்த வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் கோட்டைகாடு கிராமத்தை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக அரியலூர் மாவட்டம் முள்ளுக்குறிச்சி, ஆதானகுறிச்சி, முதுக்குளம், பாசிக்குளம் மற்றும் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்பட 60 கிராம மக்கள் சென்று வந்தனர். இருசக்கர வாகனங்களிலும் சென்று வந்தனர்.

கடந்த 3 நாட்களாக பெண்ணாடம் பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக ஆனை வாரி ஓடை, உப்புஓடை ஆகிய ஓடைகளில் இருந்து மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வெள்ளாற்றில் கலந்தது. இதனால் வெள்ளாற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடி தரைப்பாலம் நள்ளிரவு 12 மணியளவில் அடித்து செல்லப்பட்டது.

வெள்ளாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் தரைப்பாலம் மேலும் உடைந்தது.

தரைப்பாலம் உடைந்ததால் 60 கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் சுமார் 27 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் உடைந்த தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று காலை சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்பு உடைந்த தரைப் பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தரைப்பாலத்தை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிர ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பெண்ணாடத்தில் வீட்டின் சுவர் இடிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

பெண்ணாடம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது வீடு மழையில் நனைந்து இருந்தது. இதன் காரணமாக அவரது வீட்டின் சுவர் நேற்று மாலை இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #Rain #Flood


Tags:    

Similar News