செய்திகள்

கஜா புயலில் பிறந்த குழந்தைக்கு கஜஸ்ரீ என்று பெயரிட்ட பெற்றோர்

Published On 2018-11-23 16:24 IST   |   Update On 2018-11-23 16:29:00 IST
நாகப்பட்டினம் மாவட்டம், தெற்களத்தூர் பகுதியில் கஜா புயலின் போது பிறந்த பெண் குழந்தைக்கு கஜஸ்ரீ என்று குழந்தையின் பெற்றோர் பெயரிட்டனர். #GajaCyclone #Gaja #GajaSri
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம், தெற்களத்தூர் பகுதியில் வசித்துவரும் ரமேஷ் என்பவரின் மனைவி மஞ்சுளா. இரண்டாவது முறை பிரசவத்துக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் கஜாபுயல் கரையைக் கடக்க உள்ளதால், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி செய்திகள் வெளியானது.

மஞ்சுளாவின் பிரசவத்துக்கு இரண்டு நாட்கள் இருந்ததால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று தங்குமாறு மஞ்சுளாவின் உறவினர்கள் அறிவுரை கூறினர். உடனே கணவர் ரமேஷ் நவம்பர் 14-ந்தேதி மாலையில், 2 கி.மீ. தொலைவில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மஞ்சுளாவைச் சேர்த்தார். புயல் தாக்கிய 15 -ந்தேதி இரவு மஞ்சுளா மகப்பேறு வார்டில் இருந்தார்.

அன்று மாலை மின்சாரம் நின்றுவிட்டது. பலத்த காற்றினால் சுகாதார நிலையத்தின் ஜன்னல்கள் உடைந்து, அதன்வழியாக மழைநீர் உள்ளே புகுந்தது. நள்ளிரவுக்குப் பிறகு மஞ்சுளாவுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, ராமமூர்த்தி என்ற மருத்துவரும் சுந்தரி என்ற செவிலியரும் பணியில் இருந்தனர்.

மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால், எங்கும் இருட்டு மயமாக இருந்தது. விடியும் வரைக்கும் காத்திருக்க முடியாது, உதவிக்காக யாரையும் அழைக்க முடியாது என்ற நிலையில், செல்போன் டார்ச் வெளிச்சத்தின் மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தனர்.

செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மஞ்சுளா பிரசவிப்பதற்கு மருத்துவர்கள் உதவி செய்தனர். அவருக்குச் சுகப்பிரசவம் நடந்தது. சிறிது நேரத்திலேயே 2.5 கிலோ எடையுடன் அழகான பெண் குழந்தை பிறந்தது. மருத்துவருக்கு நன்றி சொல்லி விட்டு, தங்கள் குழந்தைக்கு ‘கஜஸ்ரீ’ என்று பெயர் வைத்தனர்.

கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களுக்கு பெரிய சோகத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் மஞ்சுளாவின் வாழ்க்கையில் குழந்தை பிறந்தநாளாகப் பதிவாகியிருக்கிறது. #Gaja #GajaCyclone #GajaSri
Tags:    

Similar News