செய்திகள்
வெங்கடேசன்

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேரை விடுதலை செய்தது வருத்தம் அளிக்கிறது - பலியான மாணவி தந்தை பேட்டி

Published On 2018-11-20 03:02 GMT   |   Update On 2018-11-20 03:02 GMT
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனைபெற்ற 3 பேரை விடுதலை செய்தது வருத்தமளிக்கிறது என்று பலியான மாணவி காயத்ரியின் தந்தை வெங்கடேசன் கூறினார். #DharmapuriBusBurning #TNGovernor #BanwarilalPurohit
விருத்தாசலம்:

பஸ் எரிப்பு வழக்கில் கைதாகி தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்த 3 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பலியான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூவனூரை சேர்ந்த மாணவி காயத்ரியின் தந்தையும், முன்னாள் அரசு கல்லூரி முதல்வருமான வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை விடுதலை செய்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த 3 பேருக்கும் மரண தண்டனை என்று அறிவித்து, அதன்பிறகு அதனை ஆயுள் தண்டனை என மாற்றினார்கள். இதற்காக என்ன முயற்சி செய்தார் களோ? தெரியவில்லை.

அன்றே நீதி தேவதை கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டாள். என் மகளை பறிகொடுத்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த சம்பவத்தில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. பல இன்னல்களை, பல சோதனைகளை, பல வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.

எங்கள் வீட்டு தெய்வமாக காயத்ரி இருக்கிறாள். இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

“கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி 3 மாணவிகளையும் தீ வைத்து கொளுத்திய நபர்களுக்கு ஒரு நீதிபதி தூக்கு தண்டனை விதிக்கிறார். மற்றொரு நீதிபதி ஆயுள் தண்டனை என்கிறார். அப்படி என்றால் முதல் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறா?. ஒரு கோர்ட்டு சொன்ன தீர்ப்புக்கு, மற்றொரு கோர்ட்டில் சீராய்வு மனு என்று ஒன்றை வைத்து உள்ளனர்.

கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றாத அரசு எதற்கு?. இது ஜனநாயகமா?, சர்வாதிகாரமா?. நீதி, நேர்மை கெட்டு போய்விட்டது. கோகிலவாணி இறந்த பிறகு படுத்த படுக்கையான அவரது தாயார் கடந்த ஆண்டு இறந்தே போய்விட்டார்.



இங்கு ஜனநாயகம் இல்லை. சர்வாதிகாரமாக இருக்கிறது. எதை எடுத்தாலும் லஞ்சம், லாவண்யம். நீதி எங்கு இருக்கிறது? ஏன் இந்த பித்தலாட்டம். முதல்-அமைச்சர் ‘உணர்ச்சி வசப்பட்டு விட்டார்கள்’ என கூறுகிறார். அதை எல்லாம் ஏற்க முடியாது. கவர்னர் முதலில் விடுவிக்க முடியாது என்று அறிவிக்கிறார்.

தற்போது கவர்னர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இடையில் என்ன நடந்தது?. 3 மாணவிகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை. கோர்ட்டு தீர்ப்பை கொடுத்து நிறைவேற்றாத அரசு ஒன்று இங்கு இருக்கிறது. எதற்கு சட்டம், ஒழுங்கு, நியாயம், தீர்ப்பு என்று வைத்து இருக்கிறார்கள். இதெல்லாம் பச்சை துரோகம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #DharmapuriBusBurning #TNGovernor #BanwarilalPurohit
Tags:    

Similar News